ஓஸ்லோ: நார்வே அரச குடும்பத்தைச் சேர்ந்த Mette-Marit, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சாதாரண நோயாளிகளைப் போலவே காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
52 வயதான மெட்டே மாரிட், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நுரையீரல் திசுக்களில் வடுக்கள் ஏற்படுத்தும் ‘பல்மனரி பைப்ரோசிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நார்வேயில் ஆண்டுதோறும் சுமார் 30 முதல் 35 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுகின்றன. நாட்டின் மருத்துவ சமத்துவக் கொள்கையின்படி, இளவரசியாக இருந்தாலும் மெட்டே மாரிட்டுக்கு எந்தவித முன்னுரிமை சலுகையும் வழங்கப்படவில்லை.
அதன்படி, பொதுமக்கள் காத்திருக்கும் பட்டியலிலேயே அவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. பொருத்தமான ரத்த வகை, திசு பொருத்தம் மற்றும் உறுப்பு கொடையாளி கிடைக்கும் போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசியின் உடல்நிலை காரணமாக, நார்வே அரச குடும்பத்தின் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் அவரது 25வது திருமண ஆண்டு விழா தொடர்பான நிகழ்வுகளும் அடங்கும்.
