இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: சிஜேபி போராட்டம் குறித்த ஐநா விமர்சனத்தை ஒதுக்கிய மார்கோ ரூபியோ
புதுடெல்லி: டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐநா நிபுணர்கள் விமர்சனம் தெரிவித்திருந்தனர். இந்த விமர்சனத்தை இந்தியா நிராகரித்த நிலையில், இவ்விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சார்ந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மார்கோ ரூபியோவிடம், டெல்லி போராட்டம் மற்றும் ஐநா நிபுணர்களின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்”
இதற்குப் பதிலளித்த ரூபியோ, ஐநா நிபுணர்கள் குறித்துக் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்றும், இந்திய மக்கள் தங்கள் நாட்டின் விவகாரங்களைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியாவில் ஜனநாயகமும் தேர்தல் நடைமுறைகளும் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் எந்தத் தரப்புக்கும் ஆதரவாகத் தாம் நிற்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
போராட்டங்கள் குறித்து ரூபியோ கருத்து
அமெரிக்காவிலும் தினசரி போராட்டங்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட ரூபியோ, மக்கள் தங்கள் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவது அரசியல் விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளின் ஒரு பகுதியாகும் என்றார்.
அதேவேளையில், அமைதியான போராட்டங்களுக்கும் வன்முறை நிறைந்த போராட்டங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் கலவரங்களின்போது சொத்துகள் சேதப்படுத்தப்படுவது, கட்டடங்கள் எரிக்கப்படுவது போன்ற சம்பவங்களையும் அவர் குறிப்பிட்டார்.
கியூபாவுடன் ஒப்பீடு
கியூபாவில் அரசுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுதல், நாடு கடத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் ரூபியோ கூறினார்.
இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், இத்தகைய விவகாரங்களை இந்திய மக்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
