காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளை அமல்படுத்தி, கர்நாடகா அரசு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதிநீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமாரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவில் சந்தித்து ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக கர்நாடகா அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு, சந்திப்பிற்கான ஒப்புதலும் பெறப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலை காரணமாக முதல்வர் விஜய் பெங்களூரு வருவதைத் தவிர்க்குமாறு கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக அணைகளில் தற்போது 77.537 டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால், தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் எந்த சிரமமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 26.954 டி.எம்.சி. அளவிலான நீரை கர்நாடகா தமிழகத்திற்கு வழங்கியிருக்க வேண்டும் என்றும், உரிய காலத்தில் தமிழகத்திற்கு நீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
