டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரது மகன் மொஜ்தபா புதிய ஆட்சியாளர் மற்றும் மதகுருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை ஈரான் அரசு மறுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் டிரம்ப் கூறியபடி கமேனி கொல்லப்பட்டாலும், ஈரான் மீது தாக்குதல் இன்னும் ஒரு வாரம் தொடரும் என்று அமெரிக்கா அறிவித்தது.
இதற்கிடையில் ஈரானின் இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டார். ஈரானின் அரசியலமைப்புச் சட்டப்படி புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை அவரின் தலைமையிலான கவுன்சில் நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கமேனியின் மகன் மொஜ்தபா புதிய ஆட்சியாளரும் மதகுருவுமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின.
ஆனால் மும்பையில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் இந்த செய்தியை மறுத்துள்ளது. ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்றும் அவற்றை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
யார் இந்த மொஜ்தபா?
-
மொஜ்தபா 1969ம் ஆண்டு மஷாத் நகரில் பிறந்தார்.
-
அவர் எந்த அதிகாரப்பூர்வ அரசுப் பதவியையும் வகித்ததில்லை.
-
இருப்பினும் அரசியல் மற்றும் ஆட்சியில் பின்னணியில் இருந்து செல்வாக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது.
-
ஈரான் – ஈராக் போரின் போது ஈரான் ஆயுதப்படையுடன் இணைந்து அவர் போராடியுள்ளார்.
-
மறைந்த ஆட்சியாளர் அயதுல்லா கமேனியின் மனைவி, மகள், பேரக்குழந்தை, மருமகள் மற்றும் மருமகன் ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில் உயிர் பிழைத்த குடும்ப உறுப்பினர்களில் மொஜ்தபாவும் ஒருவர்.
-
2019ம் ஆண்டு அமெரிக்க கருவூலத் துறை மொஜ்தபா மீது தடைகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.
