ஏஐ, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஸ்வீடன் இணைந்து செயல்பட முடிவு
கோதன்பர்க்: செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட இந்தியா மற்றும் ஸ்வீடன் முடிவு செய்துள்ளன.
மேற்காசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான அரசு முறை பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் Narendra Modi பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதன் பின்னர் நெதர்லாந்து சென்ற அவர், தொடர்ந்து ஐரோப்பிய நாடான Sweden சென்றார்.
ஸ்வீடனின் கோதன்பர்க் விமான நிலையத்தில் வந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் Ulf Kristersson நேரில் வரவேற்றார். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், ஸ்வீடன் இளவரசி Crown Princess Victoria உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது இருநாடுகளுக்கிடையிலான உறவுகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், புதுமை ஆராய்ச்சி, முதலீடு மற்றும் கலாசார பரிமாற்றம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா – ஸ்வீடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை இரட்டிப்பாக்கும் இலக்கை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபை சீர்திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகள் பற்றியும் இருதரப்பும் விவாதித்தன. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்ததற்காக ஸ்வீடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
