இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்கா? ரகசிய ஆவணம் வெளியீடு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் Imran Khan ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு அமெரிக்காவின் சதி காரணம் என்ற அவரது குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையில், ரகசிய தூதரக ஆவணம் ஒன்று வெளியாகி சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், Pakistan Tehreek-e-Insaf கட்சியின் தலைவராக இருந்து, 2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார்.
உள்நாட்டு அரசியல் நெருக்கடி மற்றும் வெளியுறவு கொள்கை தொடர்பான முரண்பாடுகள் காரணமாக, 2022ஆம் ஆண்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அப்போது, தனது ஆட்சி கவிழ்ப்பிற்கு அமெரிக்காவின் சதி காரணம் என இம்ரான் கான் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது அந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக கருதப்படும் ரகசிய தூதரக ஆவணம் வெளியாகியுள்ளது.
இந்த ஆவணத்தை Drop Site News என்ற புலனாய்வு ஊடகம் வெளியிட்டுள்ளது.
அந்த ஆவணத்தின் படி, 2022ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கான அப்போதைய பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி டொனால்டு லூ இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
அப்போது, “இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் அனைத்தும் மன்னிக்கப்படும். இல்லையெனில் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்தில் கடினமான சூழல் உருவாகும்,” என எச்சரிக்கப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இம்ரான் கான் ஆட்சியில் தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இம்ரான் கான் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ஏற்பட்ட மோதல்களே இந்த அரசியல் மாற்றத்திற்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
