தமிழகம்: தேர்தல் பிரசாரத்தில் எமோஷனல் அரசியலை முன்னிறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக, 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க. எம்.பி. ஆ. ராஜா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமியின் தாய் குறித்து கருத்து தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. இதை மையமாக கொண்டு அ.தி.மு.க. கொங்கு மண்டலத்தில் சென்டிமென்ட் பிரசாரத்தை முன்னெடுத்து, அதில் பலன் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்திய தேர்தல் பிரசாரத்தில், “கொரோனா காலத்தில் அ.தி.மு.க. சரியாக செயல்படவில்லை என்றால், ஸ்டாலின் உயிருடன் இருக்க முடியாது” என பழனிசாமி பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது. பின்னர், அவர் அதுபோல் பேசவில்லை என விளக்கம் அளித்தார்.
ஆனால், இந்த விவகாரத்தை தி.மு.க. தனது பிரசாரத்தில் முக்கிய அம்சமாக மாற்றியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது உரைகளில், “மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற பல நலத்திட்டங்களை வழங்கிய நான் இல்லாமல் போக வேண்டும் என பழனிசாமி நினைக்கிறார்” எனக் கூறி வருகிறார்.
இதனுடன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களும், மேடை மற்றும் வாகன பிரசாரங்களில், பழனிசாமியின் பேச்சை கண்டித்து பேச தொடங்கியுள்ளனர்.
