ஈரான் போர் குறித்து டிரம்ப் – நெதன்யாகு இடையே காரசார ஆலோசனை
நியூயார்க்: ஈரான் மீது மேற்கொள்ளப்பட உள்ள ராணுவ நடவடிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுக்க உடனடி மற்றும் கடுமையான ராணுவ தாக்குதல் அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
மற்றொரு புறம், அமெரிக்க அதிபர் Donald Trump, துாதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கலாம் என்ற அணுகுமுறையில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வளைகுடா நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த ஒரு ராணுவ நடவடிக்கையை டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் முன்னணி ஊடகமான Channel 12 வெளியிட்ட தகவலின்படி, டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் நீண்ட மற்றும் தீவிரமான ஆலோசனை நடைபெற்றுள்ளது.
ஈரான் போரின் அடுத்தகட்ட நகர்வு குறித்து இரு தலைவர்களும் முக்கியமான இறுதி முடிவை எடுக்கும் கட்டத்தில் இருப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்குள் டிரம்ப் மற்றும் நெதன்யாகு இடையே நடைபெற்ற இரண்டாவது முக்கிய பேச்சுவார்த்தை இதுவாகும்.
இதற்கு முன்பு டிரம்பின் சீன பயணம் மற்றும் அந்நாட்டு அதிபர் Xi Jinping உடனான சந்திப்பு பற்றியும் நெதன்யாகுவுடன் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவசர ஆலோசனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
