சென்னை: இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகள் என அறிவித்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் Seeman கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், “இதை தேர்தல் வாக்குறுதி என்று கூறாதீர்கள். இது இலவச அறிவிப்புகள். உண்மையான வாக்குறுதி என்றால் கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை இலவசமாக வழங்குவது, நிலம் மற்றும் வளங்களை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலைகள் அமைத்து மக்களுக்கு அவர்களது ஊர்களிலேயே வேலை வழங்குவது தான்,” என்றார்.
மேலும், “வங்கியில் ரூ.10,000 தருகிறேன், கல்விக்கு ரூ.20 லட்சம் கடன் தருகிறேன் என்று சொல்வது என்ன வாக்குறுதி? நீங்கள் வட்டி கடை நடத்துகிறீர்களா? கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை அரசு நேரடியாக வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு கடன் தருகிறேன் என்று சொல்வது சரியான அணுகுமுறை அல்ல,” எனக் கூறினார்.
அவர் தொடர்ந்து, “ஒருவர் ரூ.2000 தருகிறேன் என்கிறார், மற்றொருவர் ரூ.2500 தருகிறேன் என்கிறார். ஒருவரால் 3 சிலிண்டர், இன்னொருவரால் 6 சிலிண்டர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பணத்தை எங்கிருந்து பெறப் போகிறார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “இந்த இலவச திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் பெரிய அளவில் கடன் எடுக்க வேண்டிய நிலை உருவாகும். நாட்டின் பட்ஜெட்டே குறைவாக இருக்கும் நிலையில், இத்தகைய அறிவிப்புகள் நிதி சுமையை அதிகரிக்கும். மக்களையும் நாட்டையும் அடமானம் வைத்து கடன் வாங்குவது போல இந்த நிலை மாறிவிடும்,” எனவும் அவர் விமர்சித்தார்.
