புதுடில்லி: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் China மேற்கொண்டு வரும் ராணுவ மற்றும் கடல்சார் ஆதிக்க நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடல்சார் கண்காணிப்பை வலுப்படுத்தவும், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் Quadrilateral Security Dialogue (குவாட்) கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டில்லியில் நடைபெற்றது.
நமது வெளியுறவு அமைச்சர் S. Jaishankar தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Marco Rubio, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Penny Wong மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் Toshimitsu Motegi உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இந்தோ-பசிபிக் பகுதி சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான பிராந்தியமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சர்வதேச வர்த்தகத்திற்கு எந்தவித தடையும் இருக்கக்கூடாது என்றும், அப்பகுதியில் சரக்கு கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் Iran நடவடிக்கைக்கு குவாட் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதேபோல், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடல்சார் வள மேம்பாடுகளில் தலையீடு செய்வது, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து சுதந்திரத்தை பாதிப்பது, கடலோர காவல் மற்றும் ராணுவ விமானங்கள் மூலம் அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கும் குவாட் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்ள குவாட் நாடுகள் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன” என்றார்.
மேலும், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கான புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதாகவும், பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல்சார் வர்த்தகத்தை உறுதி செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாட்டுக்கும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முழு உரிமை உண்டு என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
