ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல்
புதுடில்லி: முப்படைகளின் போர்த்திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம்
டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
முப்படைகளின் போர்த்திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை கொள்முதல் செய்வது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
என்னென்ன தளவாடங்கள் வாங்கப்படுகின்றன?
ராணுவ அமைச்சக அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அணுசக்தி பாதிப்புகளை கண்டறியும் வாகனங்கள், தானியங்கி கண்ணிவெடி அமைப்புகள் மற்றும் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
மேலும், கடற்படை விமான நிலையங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய ரேடார்களுக்கு பதிலாக, ‘ஆருத்ரா’ ரேடார்கள் நிறுவப்பட உள்ளன.
98% கொள்முதல் உள்நாட்டு நிறுவனங்களிடம்
ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த கொள்முதலில், 98 சதவீதம் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்தே மேற்கொள்ளப்பட உள்ளதாக ராணுவ அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் திறனை மேலும் வலுப்படுத்துவதுடன், உள்நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பையும் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
