அரசுத் திட்டங்கள் மக்களுக்கு நீண்டகால நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி
புதுடில்லி: மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கு நீண்டகால நன்மைகளை வழங்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.16,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரயில் நிலையங்களைப் பல்முனைப் போக்குவரத்து மையங்களாக விரைவாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். மருந்து உற்பத்தியில் இந்தியாவின் சுயசார்பை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கைவினைஞர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் நோக்கம் தெளிவானது எனத் தெரிவித்த அவர், திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவேற்றுவதுடன், அவை மக்களுக்கு நீண்டகால நன்மைகளையும் பயன்களையும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
