வாஷிங்டன்: அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடி நடந்ததாகவும், இதனால் உலக நாடுகள் அமெரிக்காவை பார்த்து சிரிப்பதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக நாடுகளுக்கு வரி விதிப்பது முதல் வெளிநாட்டு கொள்கை நடவடிக்கைகள் வரை பல முக்கிய முடிவுகளை அவர் எடுத்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்க தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற தனது கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடி நடந்ததாகவும், பல ஓட்டுகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் தேர்தல் அமைப்பை உலகமே பார்த்து சிரிக்கிறது என்றும், அதை சரிசெய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் முறையில் கடுமையான விதிமுறைகள் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
வாக்காளர்கள் ஓட்டளிக்கும் போது கட்டாயமாக வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்றும், குடியுரிமை சான்று வழங்கிய பிறகே ஓட்டளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ராணுவத்தினரை தவிர மற்றவர்களுக்கு தபால் மூலம் ஓட்டு பதிவு செய்யும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை காப்பாற்ற குடியரசுக் கட்சியினர் அனைவரும் போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
