வாஷிங்டன்: அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த Meghnaben Patel என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு கணவர் உபேந்திரபாய் படேல், மகள் நக்ஷி மற்றும் மகன் ஸ்மித் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக அந்த பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்த அவர், சம்பவத்தன்று கொள்ளை முயற்சியை தடுக்க முயன்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதலுக்கான பின்னணி மற்றும் வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
