அமெரிக்கா-ஈரான் இடையேயான சமீபத்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா நோக்கி 11 கப்பல்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தற்போதைய நிலவரப்படி பாரசீக வளைகுடாவில் இந்திய தேசியக் கொடியுடன் 10 கப்பல்கள் இயங்கி வருகின்றன. மேலும், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் அந்தப் பகுதிக்குள் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. இருவழி கப்பல் போக்குவரத்தும் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஜூன் 17-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மொத்தம் 11 கப்பல்கள் கடந்துள்ளன. அவற்றில் தலா 2.85 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய இந்தியக் கொடியேந்திய 3 கப்பல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், வெளிநாட்டு கொடியுடன் இயங்கும் ஒரு எல்பிஜி கப்பல், ஒரு கச்சா எண்ணெய் டேங்கர் மற்றும் உரம் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் 6 சரக்கு கப்பல்களும் அந்த வழித்தடத்தை பயன்படுத்தி பயணித்து வருகின்றன. மீதமுள்ள கப்பல்களும் விரைவில் அந்தப் பகுதியை பாதுகாப்பாக கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, வங்கதேசத்தில் இந்து தெய்வங்கள் அவமதிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து இந்திய அரசு கவனித்து வருவதாகவும், அங்கு நடைபெற்று வரும் போராட்டங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயங்கரவாத செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
