மேற்காசியாவில் நிலவும் பதற்றங்களுக்கு அமைதியான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியானிடம் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீராக மேற்கொள்வது தொடர்பாக கத்தாரில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், பிரதமர் மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியான் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். அப்போது, மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து ஈரான் அதிபர் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்ற பிரதமர் மோடி, அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதியான பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அணுகுமுறையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், மேற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய தொடர்ச்சியான முயற்சிகள் அவசியம் என்றும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
