அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட்-32 போட்டியில், பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக மோதிய நிலையில், 45-வது நிமிடத்தில் எம்பாப்வே கோல் அடித்து பிரான்ஸுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதி 1-0 என்ற கணக்கில் நிறைவடைந்தது.
இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை மேலும் அதிகரித்தது. 53-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே வழங்கிய பாஸை பிராட்லி பார்கோலா கோலாக மாற்றினார். தொடர்ந்து 74-வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்த எம்பாப்வே, பிரான்ஸின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி ரவுண்ட்-16-க்கு முன்னேறி, அடுத்த போட்டியில் பராகுவே அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதற்கிடையில், கோல்டன் பூட் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிலியன் எம்பாப்வே தலா 6 கோல்களுடன் முன்னிலையில் உள்ளனர். நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
