சென்னை: பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்திய இலக்கியத்தில் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது, படைப்பாற்றல், அறநெறி மற்றும் சமூக பொறுப்பை பிரதிபலிக்கும் ஆளுமைகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைரமுத்துவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அதன் மதிப்புக்கும் தமிழ் இலக்கிய மரபுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என எழுத்தாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட பலரும் இந்த முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து பல்வேறு எதிர்வினைகள் பதிவாகி வருகின்றன.
230க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ஒரு இலக்கியவாதியின் படைப்புகள் மட்டுமல்லாமல், அவரது வாழ்வியல் மற்றும் சமூகப் பொறுப்பும் முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வைரமுத்துவின் எழுத்துகள் மற்றும் பொதுவெளி செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ‘மீ டூ’ இயக்கத்தின் போது அவருக்கு எதிராக பெண்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், உயரிய விருது வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஓஎன்வி இலக்கிய விருது அறிவிக்கப்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக அந்த முடிவு திரும்பப் பெறப்பட்ட சம்பவமும் எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், சமூகநீதி மற்றும் இலக்கியத் தரத்தை கருத்தில் கொண்டு, இந்த விருது வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
