சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது தொடரப்பட்ட ரூ.27.9 கோடி லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக 2016ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. அப்போது அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு மற்றும் சண்முகபிரபு ஆகியோருக்கு சொந்தமான முத்தம்மாள் நிறுவனம் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட ஐந்து சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பின்னர், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை கைவிடுவதாக அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக முடித்து வைக்கப்பட்ட வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துச் செல்லும் இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
