தமிழகத்தில் ஆட்சியமைப்பது தொடர்பான அரசியல் பரபரப்புக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய்க்கு முதலில் ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கி, பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை கடந்த புதன்கிழமை சந்தித்தார்.
அப்போது, ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து மறுநாளும் விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில், 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆளுநர் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசின் உதாரணத்தை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 13 நாட்களுக்கு அரசாங்கத்தை அமைத்தபோது, அவரிடம் முன்கூட்டியே பெரும்பான்மை நிரூபிக்க சொல்லப்படவில்லை. குடியரசுத் தலைவர் முதலில் அவரை ஆட்சியமைக்க அழைத்தார். பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாததால் வாஜ்பாய் தாமாகவே ராஜிநாமா செய்தார்” என்றார்.
மேலும், “அதேபோல் தமிழகத்திலும் முதலில் விஜய்க்கு ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் வழங்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபித்தால் அவர் தொடரலாம்; இல்லையெனில் ராஜிநாமா செய்வார்” என்றும் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
