சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் நீண்ட காலமாக பயணித்துள்ள விசிகவின் நேர்மையும், கூட்டணி உறவை பாதுகாக்க எடுத்த முயற்சிகளும் திமுக தலைவர் M. K. Stalin நன்கு அறிந்தவர் என்று Thol. Thirumavalavan தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தகவல் தெரிவித்தோம். இடதுசாரி கட்சிகள் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் நாங்களும் ஆதரவு அளிக்கிறோம் என்று கூறியபோது, அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இசைவு தெரிவித்தார்.
அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து நேரடியாக தெரிவிக்க முடியாத சூழல் இருந்தபோதிலும், சில முன்னாள் திமுக அமைச்சர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தோம்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பத்து ஆண்டுகளாக விசிக பயணித்து வருகிறது. கூட்டணிக்கு தேவையான பங்களிப்பை தொடர்ந்து வழங்கியுள்ளோம். அந்த பங்களிப்பை ஸ்டாலினும், Udhayanidhi Stalin அவர்களும் நன்கு அறிவார்கள்.
இருப்பினும், நாங்கள் எடுத்த முடிவை திமுக துணைப் பொதுச் செயலாளர் A. Raja உள்ளிட்ட சிலர் விமர்சித்தது வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடைய ஆதங்கத்தில் ஒரு நியாயம் இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த தவெகவுக்கு ஆதரவு அளித்ததை திமுக தொண்டர்கள் எளிதாக ஏற்றுக் கொள்வது சாத்தியமில்லை. அதனால் உருவாகும் மனநிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின், விசிக குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பதிவிட வேண்டாம் என்று தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியதோடு, சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, திமுகவுக்கு எதிராகவோ அல்லது ஆ.ராசாவுக்கு எதிராகவோ போராட்டங்கள் நடத்துவது தேவையற்றது. அதற்கு பதிலாக கட்சித் தொண்டர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளிலும், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நமது வளர்ச்சியை விரும்பாதவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பார்கள். திமுக கூட்டணியில் இருந்தாலும் விமர்சிப்பார்கள்; வேறு அரசியல் நிலைப்பாடு எடுத்தாலும் விமர்சிப்பார்கள்.
விசிகவும் நானும் கூட்டணி உறவுக்கு அளித்த முக்கியத்துவம், நட்பை மதித்த விதம், கூட்டணியின் வெற்றிக்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஸ்டாலினின் மனசாட்சிக்கு நன்றாகத் தெரியும். விசிக எப்போதும் நேர்மையுடன் செயல்பட்டுள்ளது என்பதை அவர் அறிவார்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
