சென்னை: பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளின் தரம் மற்றும் சேமிப்பு முறைகள் குறித்து தமிழக அரசு உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்கு ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூ.5.63 என்ற நிலையான விலையை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் ஒரு முட்டையின் விலை ரூ.3.70 ஆக குறைந்தபோது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறைந்த விலைக்கு அதிக அளவில் வாங்கப்பட்ட இந்த முட்டைகள், ஆண்டு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் முட்டை என்பது நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கக்கூடிய பொருள் அல்ல என்றும், பல மாதங்கள் குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்து பின்னர் கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
மேலும், கடந்த திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு பலமுறை அழுகிய முட்டைகள் வழங்கப்பட்ட சம்பவங்களை பாஜ கடுமையாக கண்டித்திருந்ததாகவும், தற்போதைய ஆட்சியிலும் அதே நிலை தொடரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது சாதாரண கொள்முதல் பிரச்சனை அல்ல; லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கையுடன் தொடர்புடைய விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்புடன் கூடிய கடுமையான ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
