கோவை: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன், கோவை கிரில் தயாரிப்பாளர் நலச்சங்க தலைவர் திருமலை ரவி இரண்டு ஆண்டுகளாக தலைமுடி மற்றும் தாடியை வெட்டாமல் ‘தவம்’ மேற்கொண்டு வருகிறார்.
கோவை மாவட்டத்தில் சுமார் 3,600 கிரில் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைக்கு தனி சிட்கோ தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக தொழில்துறையினர் முன்வைத்து வருகின்றனர்.
2024 லோக்சபா தேர்தல் நேரத்தில், கோவைக்கான தனி தேர்தல் அறிக்கையில் கிரில் உற்பத்திக்கான தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக திருமலை ரவி கூறுகிறார். 2025 நிதிநிலை அறிக்கையில் இதை நிறைவேற்றுவோம் என்றும் உறுதி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், பலமுறை கோரிக்கை வைத்தபோதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை என்றும் தெரிவித்தார்.
கிரில் உற்பத்தி நிறுவனங்களில் 90 சதவீதம் வாடகை கட்டடங்களில் இயங்குவதாகவும், மின்கட்டண உயர்வு மற்றும் நிலைக்கட்டணம் காரணமாக கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, நிதி பற்றாக்குறை ஆகியவற்றால் தொழில்கள் சிரமத்தில் உள்ளதாகவும், ஒரு லட்சம் தொழில்முனைவோர் மற்றும் ஆறு லட்சம் தொழிலாளர்கள் இந்த துறையில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், கிரில் பூங்கா அமைக்கப்படும் வரை தலைமுடி, மீசை, தாடி எடுக்கமாட்டேன் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், தற்போது தனது தோற்றம் முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தபோதிலும் அது நிறைவேறவில்லை என்றும், பல ஆண்டுகளாக போராடி சோர்வடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
