வாழப்பாடி: “என் மீது வழக்கு போடுகிறாராம்; போடுங்கள் பார்க்கலாம். நான் பல வழக்குகளை பார்த்தவன்,” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. மீது சவால் விடுத்தார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி வாழப்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
தே.மு.தி.க. தற்போது வென்டிலேட்டரில் உள்ள கட்சி போல உள்ளது. அ.தி.மு.க. உதவியவர்களை உயர்த்தும்; ஆனால் தி.மு.க. உயர்ந்தவுடன் ஏணியை பிடுங்கி விடும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்பு கிடைத்ததை விட இப்போது ஒரு இடம் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. இது தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த பரிசு. ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.
ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். யார் வேண்டுமானாலும் பேசலாம்; தமிழக முதல்வராக வர அனைவருக்கும் உரிமை உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது. அதில் கிடைத்த மண் விவசாயத்திற்கு பயன்பட்டது; விளைச்சலும் அதிகரித்தது. இந்த திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
என் மீது வழக்கு போடப் போகிறார்களாம். போடுங்கள் பார்க்கலாம்; அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். பல வழக்குகளை பார்த்தவன் இந்த பழனிசாமி.
தி.மு.க. எம்.பி. ராஜா பேசும் ஆடியோ வைரலானது. அதில் கூறியதை நான் சொன்னேன். ஆனால், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்தால், மேலும் ஆடியோ வெளியிடுவார்.
மேலும், 2021 தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் கூறியிருந்தார். “யார் இருந்தாலும் விடமாட்டேன்” என்றார். அதேபோல், நானும் அதே கருத்தை தெரிவிக்கிறேன்.
கருணாநிதி எதிரியாக இருந்தாலும், அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டாரா என்பதையும் விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயலலிதா குறித்து கூறியது போல, இதுவும் முன்னாள் முதல்வர் தொடர்பான விஷயம் தான். யார் தவறு செய்தாலும் விடமாட்டேன்,” என்று பழனிசாமி தெரிவித்தார்.
