பொங்கலூர்: பல்லடம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்திற்கு வருகை தந்தபோது, அவரை வரவேற்க பொதுமக்களுக்கு தலைக்கு ₹200 வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில், தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராஜ் போட்டியிட்டு வருகிறார். அவர் தற்போது தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று கண்டியன்கோவில் கிராமத்தில், தி.மு.க. நிர்வாகிகள் வீடு தோறும் சென்று, “வரவேற்புக்கு வந்தால் ₹200, ஆட்டோவில் பிரசாரத்திற்கு வந்தால் ₹500” வழங்கப்படும் என்று கூறி பொதுமக்களை அழைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பெருமளவில் மக்கள் வேட்பாளரை வரவேற்க காத்திருந்தனர்.
வேட்பாளர் செல்வராஜ் வாகனத்திலிருந்து இறங்கி மக்களிடம் குறைகளை கேட்டார். பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் சென்ற இடமெல்லாம் அதிகமான கூட்டம் திரண்டது.
மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் வரவேற்புக்காக வந்தவர்களை கட்சி நிர்வாகிகள் கணக்கெடுத்து, பின்னர் வரிசையில் நிற்க வைத்து தலைக்கு ₹200 வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தடுக்க போலீசார் முயற்சி செய்து, “இங்கு பட்டுவாடா செய்யக்கூடாது” என நிர்வாகிகளை விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தி.மு.க. நிர்வாகிகள் பணப்பட்டுவாடாவை தொடர்ந்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில்:
“தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், ஆடு, மாடு விற்று பணம் எடுத்துச் செல்லும் அப்பாவி மக்களை மட்டுமே கண்காணிக்கின்றனர்.
ஆனால், கட்சியினர் மூட்டைகளில் பணம் கொண்டு வந்து பட்டுவாடா செய்வதை கண்டுகொள்ளாமல், பறக்கும் படை அலட்சியம் காட்டுகிறது,” என்று குற்றஞ்சாட்டினர்.
