செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் மறைவு: பிரதமர், துணை ஜனாதிபதி இரங்கல்
புதுடில்லி: வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றிய கலைஞர் உம்மிடி எத்திராஜ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்
உம்மிடி எத்திராஜ் மறைவு குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், அவரது மறைவு மிகுந்த வேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி எத்திராஜ், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்ததற்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார் என மோடி தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அந்தச் செங்கோலுக்கு உரிய மரியாதை அளித்து சிறப்பிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிகழ்வின்போது உம்மிடி எத்திராஜைச் சந்தித்து, நாட்டுக்கும் அதன் கலாசாரத்துக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார். அவரது வாழ்க்கையும் கலைத்திறனும் இந்தியாவின் பாரம்பரியத் தொடர்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனும் உம்மிடி எத்திராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாரம்பரியப் புனிதச் சின்னமான வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய அவரது மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
செங்கோலை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு மரியாதையுடனும் நன்றியுணர்வுடனும் என்றும் நினைவுகூரப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாரம்பரியக் கைவினைக் கலை மரபைப் பாதுகாப்பதில் உம்மிடி எத்திராஜ் ஆற்றிய பங்களிப்பு விலைமதிப்பற்றது என்றும் அவர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
