பாரீஸ்: ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், பிரான்சில் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்றும், அடுத்த சில நாட்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் தகவலின்படி, ஜூன் 20-ஆம் தேதி தொடங்கிய இந்த வெப்ப அலை, ஐரோப்பாவின் சமீபத்திய வரலாற்றில் மிகக் கடுமையான ஒன்றாக கருதப்படுகிறது. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பருவநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனி, போலந்து, இத்தாலி மற்றும் பிரான்சின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால் மின்உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் பல இடங்களில் ரயில் மற்றும் டிராம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் முக்கிய ஆறுகளில் நீர்வரத்து குறைந்ததால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், விவசாயத்திற்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
ஹங்கேரியில் தனுபே நதியின் நீர்மட்டம் குறைந்ததால் அணுமின் நிலையங்களில் மின்உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியில் போ நதியில் நீரோட்டம் குறைந்ததால் கடல்நீர் உட்புகுந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வெப்பத்தைத் தணிக்க ஆறுகள் மற்றும் ஏரிகளில் குளிக்கச் சென்ற பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்சில் சில பகுதிகளில் வெப்பம் குறைந்திருந்தாலும், வடகிழக்கு பகுதிகளில் வெப்ப அலை தொடர்கிறது. வானிலை மாறினாலும், அதன் தாக்கம் மேலும் 10 நாட்கள் வரை நீடிக்கக்கூடும் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பலத்த காற்றால் ஏற்பட்ட மின்தடையால் வடக்கு மற்றும் மத்திய பிரான்ஸ் பகுதிகளில் சுமார் 63 ஆயிரம் வீடுகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றன.
