வன்முறை செயல்களில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது: உத்தரப் பிரதேச அரசு அதிரடி
லக்னோ: ஆட்சி முறையை மாற்றும் நோக்கில் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த விதிகள் மாநில அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளுக்குப் பொருந்தும்.
புதிய உத்தரவின்படி, வன்முறை வழியாக தற்போதைய ஆட்சி முறையை மாற்றுவதே தங்களது நோக்கம் எனக் கூறும் அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அரசு வேலை பெறுவதற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
பணி நியமனத்திற்கான சரிபார்ப்பு தேதிக்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்குள், 21 வயதுக்குப் பிறகு ஒருவர் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், அவர் தொடர்ந்து அத்தகைய செயல்களில் தீவிரமாக இருப்பதற்கான ஆதாரமாக அது எடுத்துக்கொள்ளப்படும். இருப்பினும், அவரது நடத்தையில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளதற்கான நம்பகமான ஆதாரங்கள் இருந்தால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய முடியும்.
விண்ணப்பதாரரின் அரசியல் கொள்கை அல்லது சித்தாந்தத்தின் அடிப்படையில் மட்டும் அவரை அரசு வேலைக்குத் தகுதியற்றவர் என அறிவிக்க முடியாது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது விசாரணை நிலுவையில் இருந்தாலோ அதனால் மட்டும் அவர் தகுதியிழக்க மாட்டார்.
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள், சமரசத்தின் மூலம் முடிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், பணி நியமனத்தைத் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பதாரரிடம் சுய சான்றளிக்கப்பட்ட உறுதிமொழியைப் பெற்று, தற்காலிக பணி நியமனக் கடிதம் வழங்கலாம். சரிபார்ப்பின்போது தவறான தகவல் அளித்தது தெரியவந்தால், உடனடியாகப் பணிநீக்கம் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்டக் காவல்துறையும் உளவுத்துறையும் சரிபார்ப்பு அறிக்கையை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சரிபார்ப்புக்காக விண்ணப்பதாரரின் வீட்டிற்கு போலீசார் நேரில் செல்ல வேண்டியதில்லை என்றும், விண்ணப்பதாரரும் காவல்துறை முன்பு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
