அரக்கோணம்: “ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் செயல்பட்டு வரும் கற்பகம் ரேஷன் கடையில் அமைச்சர் காந்திராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் தரம் மற்றும் எடையை அவர் நேரில் பரிசோதித்தார்.
பின்னர் ரேஷன் கடை ஊழியர்களிடம் பேசிய அமைச்சர் காந்திராஜ், “ரேஷன் கார்டுதாரர்களுக்கு சரியான எடையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இதில் எந்த தவறும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமாகவும் இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், “தரமற்ற பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு வந்தால் அவற்றை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது. அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
“ரேஷன் கடைகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் உடனடியாக என் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றும் அமைச்சர் காந்திராஜ் அறிவுறுத்தினார்.
