இரவு நேர மின் தடைக்கு மின் சாதன பழுதே காரணம்: மின் வாரியம் விளக்கம்
சென்னை: “இரவு நேரங்களில் அதிக மின் சுமை ஏற்படுவதால், கேபிள்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்பட்டு மின் தடை உருவாகிறது” என்று தமிழக மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மின் சாதனங்களில் ஏற்பட்ட பழுதுகளால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“சமீப காலமாக தமிழகத்தின் மின் தேவை தினசரி 20,000 மெகாவாட்டிற்கு குறைவாகவே இருப்பதால், மின் விநியோகம் சிரமமின்றி வழங்கப்பட்டு வருகிறது. மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் நுகர்வோருக்கு தொடர்ச்சியான மின் விநியோகம் உறுதி செய்யப்படுகிறது.
சென்னை மண்டலத்தில் மட்டும் 38.79 லட்சம் நுகர்வோருக்கு 253 துணை மின் நிலையங்கள், 40,798 டிரான்ஸ்பார்மர்கள், 16,582 கிலோமீட்டர் கேபிள்கள் மற்றும் 18,092 கிலோமீட்டர் மேல்நிலை கம்பிகள் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது.
எனினும், சில பகுதிகளில் மின் விநியோக நிலையங்கள் மற்றும் மின் சாதனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் மின் தடை உருவாகி வருகிறது.
குறிப்பாக, மின் பயன்பாடு அதிகரிக்கும் இரவு நேரங்களில் அதிக மின் சுமை காரணமாக கேபிள்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
இந்த பிரச்னைகளை உடனடியாக சரிசெய்ய அனைத்து மின் விநியோக வட்டாரங்களிலும் நடமாடும் பராமரிப்பு குழுக்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் மின் விநியோக சீரமைப்பு பணிகளுக்காக கூடுதல் தற்காலிக பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்னகம் நுகர்வோர் சேவை மையம், கள அலுவலர்கள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக பெறப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
