சென்னை: ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த 2024 பிப்ரவரி 29ஆம் தேதி, சென்னை-மதுரை இடையே இயக்கப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சுமார் 30 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.150 கோடியாக மதிப்பிடப்பட்டது. மேலும், அதே காலகட்டத்தில் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கோகைன் பார்சலின் மதிப்பு ரூ.29.7 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, 2024 மார்ச் 5ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையை நோக்கிச் சென்ற படகில் நடத்தப்பட்ட சோதனையில் 97 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.108 கோடியாக கணக்கிடப்பட்டது.
இந்த தொடர் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் John Britto என்பவர் முக்கிய நபராக இருப்பது மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் இடங்களை குறிவைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் மதுரையில் சோதனை மேற்கொண்டனர்.
மொத்தம் ஐந்து இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய நபர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
