திமுக ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்துள்ளது. முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டர்களை ஆய்வு செய்து, நிதி இழப்பு அல்லது முறைகேடு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட இருந்த இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.1,000 கோடி. சென்னை, மதுரை மற்றும் கோவையில் மொத்தம் 500 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பேருந்துகளை வாங்குதல், இயக்குதல் மற்றும் பராமரிப்புக்கான செலவுகளை அரசு ஏற்காமல், தனியார் நிறுவனங்களே அந்த பொறுப்புகளை ஏற்று, அரசு ஒரு கிலோமீட்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் செலுத்தும் புதிய ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த டெண்டரில் அசோக் லேலண்ட் மற்றும் ஜேபிஎம் நிறுவனங்கள் பங்கேற்றிருந்த நிலையில், குறைந்த தொகையை மேற்கோள் காட்டியிருந்த ஜேபிஎம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், நிதி மற்றும் நிர்வாக காரணங்களால் அந்த டெண்டரை அரசு ரத்து செய்துள்ளது.
