மேக் இன் இந்தியா திட்டத்தால் பல துறைகளில் மாற்றம்: பிரதமர் மோடி
புதுடெல்லி: ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி, முதலீடு மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் பல்வேறு துறைகளிலும் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், இந்தியாவில் அதிக உற்பத்தி, அதிக முதலீடு மற்றும் அதிக ஏற்றுமதி ஆகியவற்றை நோக்கி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்கட்டமைப்பு, தொழில், புதுமைக்கு முக்கியத்துவம்
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் நோக்கம், இந்தியா வளர்ச்சியடைந்து வளம் பெறுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் புதுமைகளை உருவாக்குவதாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
செமிகண்டக்டர் முதல் மொபைல் உற்பத்தி வரை
செமிகண்டக்டர், விண்வெளி மற்றும் விமானத் துறை, ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகள் தயாரிப்பு, கப்பல் கட்டுமானம், மெட்ரோ ரயில், ஆட்டோமொபைல், மருந்துகள், சூரிய மின் உற்பத்தி மற்றும் மொபைல் போன் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை விளக்கும் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அரசின் சமீபத்திய தகவலின்படி, இந்தியாவின் மின்னணு உற்பத்தி 2014-15ஆம் ஆண்டில் சுமார் ரூ.1.9 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் ரூ.13.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2014ல் தொடங்கிய மேக் இன் இந்தியா
இந்தியாவை உலகளாவிய உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் புதுமைக்கான மையமாக உருவாக்கும் நோக்கில் 2014 செப்டம்பர் 25ஆம் தேதி ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. முதலீடுகளை எளிதாக்குதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் உலகத் தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற அணுகுமுறையின் அடிப்படையில் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
27 துறைகளில் மேக் இன் இந்தியா 2.0
‘மேக் இன் இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் தற்போது மொத்தம் 27 துறைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 15 உற்பத்தித் துறைகளும், 12 சேவைத் துறைகளும் அடங்குகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
