மேகதாது வழக்கு: தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி
புதுடில்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக திட்ட வரைவு அறிக்கையை தயாரிக்கும் பணிகளிலும் அந்த மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த திட்ட வரைவு அறிக்கைக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதே நேரத்தில், மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசும் தனியாக மனு தாக்கல் செய்திருந்தது.
தமிழக அரசின் கோரிக்கைக்கு ஆதரவாக புதுச்சேரி மற்றும் கேரள அரசுகளும் மேகதாது அணைக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, 2025 நவம்பரில் முக்கிய உத்தரவு பிறப்பித்தது.
அதில், “கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கை மீது இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் செயல்பட்டு வருகின்றன.
எனவே, திட்ட வரைவு அறிக்கை குறித்து இந்த அமைப்புகள் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே மத்திய நிர்வாக ஆணையம் முடிவு எடுக்க வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது” என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள், “சீராய்வு மனுவின் உள்ளடக்கங்களையும், அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் கவனமாக பரிசீலித்தோம். 2025 நவம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய போதுமான முகாந்திரம் எதுவும் இல்லை” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
