கோவையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி, மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கூறினார்.
அவர் பேசுகையில், முன்னாள் திமுக அமைச்சருடன் தொடர்புடையதாக கூறப்படும் எம்.எல்.ஏ. குதிரை பேரம் குறித்த வழக்கில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்தார். பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதே சட்டவிரோதமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசின் முதல் 50 நாட்களில் ஊழல் குறைந்துள்ளதாக பொதுமக்களே கருத்து தெரிவித்து வருவதாகவும், அரசு அலுவலகங்களில் மக்கள் பணிகள் விரைவாக நடைபெறுவதாகவும் அவர் கூறினார். சட்டம்-ஒழுங்கு நிலையும் மேம்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேகதாது அணை தொடர்பாக அவர் கூறுகையில், இது தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையிலான முக்கியமான பிரச்சினை என்றும், மேகதாதுவில் எந்தவித கட்டுமானப் பணிகளையும் தமிழக காங்கிரஸ் ஆதரிக்காது என்றும் தெரிவித்தார்.
மேலும், கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது முக்கியமல்ல என்றும், தேசிய அளவில் ஒரே கட்சி இரு மாநிலங்களிலும் அரசியல் பங்காற்றுவதால் பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
