மதுரை: மதுரை மாவட்டத்தில் கனமழையின்போது மரத்தடியில் ஒதுங்கி நின்ற பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள குன்னுவார்பட்டி பகுதியில் இன்று பெண்கள் சிலர் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
மழையிலிருந்து தப்பிக்க அருகில் இருந்த மரத்தின் கீழ் பெண்கள் சிலர் ஒதுங்கி நின்றனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வாசியம்மாள் என்ற பெண் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த வாசியம்மாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
