போக்சோ வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
மதுரை: போக்சோ வழக்கில் சிறுமியிடம் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வற்புறுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாளும் அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு Madras High Court Madurai Bench உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தந்தை ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி K. K. Ramakrishnan விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “சிறுமி அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதால் தந்தை கண்டித்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறுமி ‘1098’ குழந்தைகள் உதவி எண்ணை தொடர்பு கொண்டபோது, அங்கு பேசிய அலுவலர்கள் வற்புறுத்தியதால் மனுதாரருக்கு எதிராக பொய்யான புகார் அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தில், ‘பெற்றோருக்கிடையே அடிக்கடி சண்டை நடந்தது. மொபைல் போன் பயன்படுத்தியதற்காக தந்தை கண்டித்தார். குடும்ப பிரச்னையை சமாளிக்கவே 1098 எண்ணை தொடர்பு கொண்டேன். ஆனால் அங்கு பேசிய அலுவலர், தந்தை தவறாக தொட்டதாக புகார் அளிக்க வற்புறுத்தினார்’ என்று கூறியுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “சிறுமி 5 நாட்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும், குழந்தைகள் நல அலுவலர்கள் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளது. தந்தைக்கு எதிராக புகார் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது” என்று நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதி தனது உத்தரவில், “குழந்தைகள் நலக்குழு, காப்பகங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சில நேரங்களில் குழந்தைகளை குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வற்புறுத்துவதாக தோன்றுகிறது. இது உண்மையாக இருந்தால், அதிகார துஷ்பிரயோகம் என கருதப்படும்” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
மேலும், “இத்தகைய செயல்கள் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களின் நம்பகத்தன்மையையும் பாதிக்கின்றன” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதனையடுத்து, ‘1098’ மூலம் வரும் புகார்களை கையாளும் அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள், காப்பக அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக தலைமை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சிறுமி தொடர்பு கொண்டபோது பணியில் இருந்த அலுவலர் குறித்து தென்மண்டல ஐஜி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து ஜூலை 2ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதேபோல், சிறுமிக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பிற்காக மாவட்ட ஆட்சியர் மூலம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதியாக, மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
