ஜெருசலேம்: ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் நகர்வுகளை கண்காணிக்க, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஈரானின் போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் குடும்பத்தினருடன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது குறித்து பிரிட்டனைச் சேர்ந்த “பைனான்ஷியல் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விரிவான போக்குவரத்து கண்காணிப்பு கேமரா அமைப்புக்குள் மொசாட் பல ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த அமைப்பை உளவு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அந்த கேமராக்களில் ஒன்றில் பதிவான காட்சிகள் டெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு குழுவினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்தை தெளிவாக காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிகளை வைத்து கமேனியின் பாதுகாப்பு குழுவின் பணிச்சுழற்சி, அவர்களின் முகவரி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தினசரி நகர்வுகள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த தரவுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் மூலம் கமேனி கடந்த 28ஆம் தேதி டெஹ்ரானின் பாஸ்கார் வீதியில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த தகவலை அடிப்படையாக கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. பாதுகாப்பு தகவல்கள் பரிமாறப்படாமல் இருக்க சில நேரம் மொபைல் சேவைகளும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான்படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
