தமிழகத்தில் தனியார் செயலிகள் மூலம் இயக்கப்படும் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் எப்போது கொண்டு வரப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பைக் டாக்சி சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான தனிப்பட்ட சட்ட விதிமுறைகள் தற்போது இல்லை என்று குறிப்பிடப்பட்டது. மற்ற டாக்சி சேவைகளைப் போல இல்லாமல், பைக் டாக்சி சேவைகள் முழுமையாக தனியார் அகரிகேட்டர் நிறுவனங்களின் செயலிகள் மூலமாகவே இயக்கப்படுகின்றன என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
அகரிகேட்டர் நிறுவனங்கள் செயல்பட அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் கீழ் பணியாற்றும் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் சமத்துவம் மற்றும் வாழ்வுரிமை கொள்கைகளுக்கு எதிரானதாகும் என மனுதாரர் வாதிட்டார்.
மேலும், அகரிகேட்டர் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மாநில அரசுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் பாதுகாப்பு, கட்டண நிர்ணயம், காப்பீடு மற்றும் புகார் தீர்வு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, தமிழகத்தில் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் N. Sathish Kumar மற்றும் M. Jothiraman ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சிவா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பைக் டாக்சி சேவைக்கான விதிமுறைகள் எப்போது கொண்டு வரப்படும் என்பது தொடர்பாக தற்போதைய நிலையை விளக்கும் அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை முதன்மை செயலர், தமிழக போக்குவரத்துத் துறை முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் ஜூலை 6ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
