ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் Donald Trump முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நிராகரித்துள்ளது.
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக டிரம்ப் குற்றம் சாட்டியதுடன், அந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஈரான், இந்த குற்றச்சாட்டுகள் எந்தவித ஆதாரமும் இல்லாதவை எனக் கூறியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல் மீது நடந்த தாக்குதல் விவகாரத்தில் ஈரான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளது. மேலும், ஒரு வார காலத்தில் மூன்று இந்தியக் கப்பல்கள் தாக்கப்பட்டதுடன், மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்திலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட உள்ள சாத்தியமான ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் Abbas Araghchi முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், அமெரிக்காவுடன் ஏற்படவுள்ள ஒப்பந்தத்தை தடுக்க இஸ்ரேல் முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், அமெரிக்காவின் வரைவு ஒப்பந்தத்தில் கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருவது முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளதாகவும், அந்த முற்றுகை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் முதல் நிபந்தனை என்றும் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியின் நிர்வாகம் இனி முந்தைய நிலையைப் போல இருக்காது என்றும், இதுதொடர்பாக ஓமனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது பிராந்திய கூட்டணிகளையோ சார்ந்து இருக்காமல், தங்களது மக்கள் மற்றும் ஆயுதப்படைகளையே நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆரம்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அமெரிக்கா தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும், அந்த காலகட்டத்தில் உடன்பாடு எட்டப்படலாம் அல்லது போர் நிறுத்தம் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறினார். அதேவேளையில், 60 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பும் இருப்பதாக எச்சரித்தார்.
ஒப்பந்தத்திற்கு ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு கூட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்தால் அது தொலைவிலிருந்தே கையெழுத்திடப்படும் என்றும், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்குமா என்பது குறித்து சந்தேகம் இருப்பதாகவும் கூறினார்.
