பெண் வக்கீல்களுக்கு 30% இட ஒதுக்கீடு கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்ற நோட்டீஸ்
மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைக்கும் சட்ட குழுக்கள், அரசு சட்ட அதிகாரி பதவிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற சட்ட குழுக்கள், சட்ட உதவி அமைப்புகள் உள்ளிட்டவற்றில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அல்லது பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனக் கோரி Ladli Foundation சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி Surya Kant மற்றும் நீதிபதிகள் Joymalya Bagchi, Vipul M. Pancholi ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
லாட்லி பவுண்டேஷன் சார்பில் மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான Vikas Singh ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், “உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக M. Fathima Beevi 1989ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்று 35 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை 11 பெண்கள் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் 5.88 சதவீதமாகவும், உயர் நீதிமன்றங்களில் 13.76 சதவீதமாகவும் மட்டுமே உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
மேலும், “நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒரு பெண் கூட அட்டர்னி ஜெனரலாக அல்லது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படவில்லை. சட்டக் கல்லூரிகளில் பெண்கள் அதிக அளவில் சேர்ந்து வருகிறார்கள். ஆனால் பதவி உயர்வு மற்றும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் போது அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்,” என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
