பெங்களூரு: கர்நாடகாவில் பெண் மருத்துவரிடம் ரூ.4.15 கோடி முதலீட்டு மோசடி நடைபெற்ற வழக்கில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியாரின் வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் அவரிடம் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான பெண் மருத்துவரை, 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டம் என கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதை நம்பிய அவர், பல்வேறு தவணைகளில் 21 வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.4.15 கோடியை பரிமாற்றம் செய்துள்ளார்.
பின்னர் லாபமோ, முதலீட்டு தொகையோ திரும்ப கிடைக்காததால், அவர் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், பாதிக்கப்பட்டவர் அனுப்பிய தொகையில் ரூ.19 லட்சம் ‘ராம் டிராவல்ஸ்’ என்ற வங்கி கணக்கிற்கு சென்றது தெரியவந்தது.
அந்தக் கணக்கிலிருந்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் ரஜினிகுமார் என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விசாரணைக்காக இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இதனால், முன்ஜாமின் கோரி அவர் பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது அறக்கட்டளைக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டும் வங்கி கணக்கிற்கு தெரியாமல் இந்தப் பணம் வந்ததாகவும், சைபர் மோசடி குறித்து தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், போலீசாரின் வாதத்தை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
