காவல் நிலைய எல்லைகளை காரணமாகக் கூறி பொதுமக்களின் புகார்களை ஏற்க மறுக்கக் கூடாது என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
குற்றச் சம்பவங்கள் எந்த காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது என்பது குறித்து சில நேரங்களில் காவல்துறையினரிடையே குழப்பம் நிலவுவதால், புகார் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையை தவிர்க்கும் வகையில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, வழிப்பறி, விபத்து அல்லது வேறு எந்த குற்றச் சம்பவம் தொடர்பான புகாராக இருந்தாலும், பொதுமக்கள் அளிக்கும் புகாரை எந்த காவல் நிலையமும் நிராகரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகார் பெறப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குள் அந்த சம்பவம் வந்தால், உரிய காவல் நிலையத்திற்கு அந்த புகாரை மாற்றி அனுப்ப வேண்டும் என்றும், புகார்தாரர்களுக்கு விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளின் தொடர்பு விவரங்களையும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடம் புகார்களை பெற மறுக்கும் அல்லது தேவையற்ற காரணங்களால் அலைக்கழிக்கும் காவல்துறையினர் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி தனது சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை, காவல்துறையின் சேவையை மேலும் எளிதாகவும், மக்களுக்கு அணுகக்கூடியதாகவும் மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
