புதுடில்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் இந்தியா வர உள்ளார்.
டில்லியில் நடைபெற உள்ள இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். அந்த வகையில் ரஷ்ய அதிபர் புடின் செப்டம்பர் 12ஆம் தேதி இந்தியா வருவார் என கிரெம்ளின் அதிகாரி யூரி புஷ்கோவ் தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்குள் புடின் மேற்கொள்ளும் இரண்டாவது இந்திய பயணம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 23வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் புதுடில்லி வந்திருந்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பல்வேறு ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வரும் நிலையில், இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அரசியல், பொருளாதாரம் மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.
