பத்தனம்திட்டா: கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிகளுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளதாக காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
கேரள சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அடூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: “என் மீது 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 மணி நேரத்திற்கும் மேலாக மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தின. ஆனால், சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அல்லது ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எதிராக அதுபோன்ற விசாரணை நடைபெறவில்லை.
சமீபத்தில் கேரளாவுக்கு வந்த பிரதமர் மோடியும் சபரிமலை விவகாரம் குறித்து பேசவில்லை. இதனால், பா.ஜ.க. மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்பதற்கான சாட்சி இதுவே,” என அவர் குற்றம்சாட்டினார்.
