புதுடில்லி: நாடு முழுவதும் பள்ளிகள், அரசு நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபர் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீப காலமாக டில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக காலை நேரங்களில் இந்த மிரட்டல்கள் வந்ததால், அவை எங்கிருந்து அனுப்பப்படுகின்றன என்பதை கண்டறிவதில் போலீசார் சிரமப்பட்டனர்.
முதலில், வெளிநாட்டு முகவரிகளில் இருந்து இ-மெயில்கள் அனுப்பப்பட்டதாகத் தோன்றிய நிலையில், பின்னர் அவை பொய்யான மிரட்டல்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மெயில்களின் மூலத்தை கண்டறிய டில்லி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து இந்த மிரட்டல் மெயில்கள் அனுப்பப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உள்ளூர் போலீசாரின் உதவியுடன் சந்தேக நபரை தேடும் பணியில் டில்லி போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஸ்ரீனிவாஸ் லுயிஸ் (47) என்பவர் இந்த மிரட்டல்களுக்கு காரணமானவர் என உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்து விசாரித்ததில், இதுவரை 1,100 முறை வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இவர், மைசூரில் தன் தாயுடன் வசித்து வந்தார். அவரின் தாய் கர்நாடக அரசின் முன்னாள் ஊழியர் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவரை மேலதிக விசாரணைக்காக டில்லிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
