தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ராஜினாமா கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையால் ஈர்க்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்ததாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதும், அரசியல் என்பது சாதாரண மக்களுக்கும் உரியது என்பதை நிரூபிப்பதுமே தனது நோக்கமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இளம் வயதிலும் அனுபவம் குறைந்த நிலையிலும் தன் மீது நம்பிக்கை வைத்து முக்கிய பொறுப்புகளை வழங்கிய கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தமிழக அரசியல் சூழலை புரிந்துகொண்டு மக்களிடம் பேசுவதில் தேசிய கட்சிகள் சவால்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை. அந்த எண்ணத்தை மாற்ற முயற்சி செய்தேன். பல தடைகள் மற்றும் எதிர்ப்புகளை மீறியும் அதில் ஓரளவு வெற்றி கண்டேன்” என்று தனது கடிதத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் சார்ந்த முக்கிய விவகாரங்களில் கட்சியின் மூத்த தலைமையுடன் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, தங்களது பார்வைகள் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட சிந்தனைக்குப் பிறகு, அரசியலுக்கு வந்த உண்மையான நோக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுவதாகவும், எதிர்காலத்தில் வாழ்க்கை தன்னை எங்கு அழைத்துச் செல்கிறதோ அந்தப் பாதையில் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவித்து, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அளித்துள்ள ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு அண்ணாமலை தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
