பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மக்கள் தொகை 14.60 சதவீதத்தில் இருந்து 2 சதவீதத்திற்கும் கீழ் சரிவு: அறிக்கையில் தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஹிந்து சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், சொத்துக்கள் பறிப்பு மற்றும் பெண்கள், சிறுமிகள் கடத்தல் தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த ‘இன்சைட் யு.கே.’ அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹிந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்த அமைப்பு, பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவிடம் இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
ஹிந்துக்கள் மக்கள் தொகையில் சரிவு
அறிக்கையின்படி, 1941-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் தற்போதைய பாகிஸ்தான் பகுதிகளில் ஹிந்துக்களின் மக்கள் தொகை 14.60 சதவீதமாக இருந்தது.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்துள்ளதாகவும், தற்போது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் ஹிந்துக்களின் பங்கு 2 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூர்வீக சொத்துக்களை இழந்த ஹிந்து குடும்பங்கள்
பாகிஸ்தானை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஹிந்து குடும்பங்கள், ‘எதிரி சொத்து சட்டங்களின்’ கீழ் தங்களது பூர்வீக நிலங்கள் மற்றும் விவசாயப் பண்ணைகளை இழந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இத்தகைய நடவடிக்கைகள் ஹிந்து சமூகத்தினரைப் பொருளாதார ரீதியாகப் பாதித்து, வறுமை நிலைக்குத் தள்ளியதுடன், தொடர்ந்து இடம்பெயரும் சூழலையும் உருவாக்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுவதாகவும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, அவர்களைக் கடத்தியவர்களுக்கே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
