சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் இன்று (மே 15) சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்கு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள போதிய இட வசதி இல்லாததால், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கும் திட்டம் முன்னாள் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் சுமார் 5,320 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறப்பட்டது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி, உள்ளூர் விவசாயிகள் நீண்டகாலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
2025 ஜனவரியில் பரந்தூருக்கு சென்ற விஜய், அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் இருப்பதால், திட்டம் ரத்து செய்யப்படுமா அல்லது மாற்றங்களுடன் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் நடைபெற்ற ஆலோசனையில், திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனும் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் BMW, TVS Motor Company, Hatsun Agro Product உள்ளிட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். புதிய முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மேகதாது அணை விவகாரம், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறப்பு, குறுவை சாகுபடி, பயிர்காப்பீடு மற்றும் நீர்நிலைகள் தூர்வாருதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
