சென்னை: பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அனுமதிகளை விரைந்து வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திட்டத்தின் செயல்பாட்டில் ஏற்படக்கூடிய நிலம், நிதி மற்றும் நிர்வாக சிக்கல்களை தீர்க்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளில் நிலவும் சவால்கள் மற்றும் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக மொத்தம் 5,600 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அரசுக்கு சொந்தமான நிலங்களைத் தவிர்த்து 3,700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் Vijay, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. ஆட்சியை அமைத்துள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்தன. இதற்கிடையில், திட்டத்தின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஆய்வறிக்கையை தயாரித்து முதல்வர் விஜயை சந்திக்க விமான நிலைய ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அருகே புதிய பசுமை விமான நிலையம் அமைவது தென் மாநிலங்களுக்கான முக்கிய நுழைவாயிலாக அமையும் என்றும், இது வர்த்தகம், முதலீடு, ஏற்றுமதி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை வழங்கும் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் திட்டமாகும் என்று தெரிவித்தன.
மேலும், திட்டத்திற்கு தேவையான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அனுமதிகளை விரைவாக வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதுடன், பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
திட்டத்தில் ஏற்படக்கூடிய நிர்வாக, நிதி மற்றும் நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு தனிக்குழு அமைத்துள்ளதாகவும், மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் விரிவான திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அடுத்தகட்ட செயல்முறைகள் விரைவாக முன்னேறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
